வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு அறவழிப் போராட்டத்திற்கு இன்று சாதகமான பதில் கிட்டியுள்ளது. இதற்கமைய, மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் 36 நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் முள்ளிக்குளம் கடற்படைத் தளத்தில் இன்று நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது 100 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். எவ்வாறாயினும், கடற்படை முகாம் காணப்படும் பகுதியிலுள்ள 27 வீடுகளிலிருந்து படையினர் வெளியேற 8 மாதங்கள் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இன்று விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் கொட்டில்கள் அமைத்து தங்க முடியும் எனவும் அவர்களுடைய காணிகளை அதிகாரிகளூடாக அடையாளப்படுத்த முடியும் எனவும் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மீள்குடியேறும் மக்களுக்கான தற்காலிகக் கூடாரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டார். மக்களுக்கு உறுதியளித்தவாறு மிக விரைவில் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.