north missing protestகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

எனவே கடந்த பல வருடங்களாக அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 39ஆவது நாளாக தொடர்கின்றது. அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க கோரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20.02.2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.