north missing protestகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 43ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது. தங்களது காணிகளுக்கான உரித்தாவணங்களை வழங்குமாறும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரி அவர்களின் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 73ம் நாளாகவும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசாங்க பிரதிநிதிகள் யாரும் சந்திக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கிடையில் காணிவிடுவிப்பை வலியுறுத்தி முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாம் நாளாகவும் தொடர்கிறது. தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரிய அனுமதிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.