ranil-modiவெசாக் பண்டிகைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு வருவது இலங்கையின் அழைப்பின் பேரிலேயே எனவும், இதன்போது எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அண்மையில் இந்தியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட விஜயத்திற்கு அமைய, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா – இலங்கைக்கு இடையில் உண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன?திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இதற்கு அமைய, எண்ணெய் தாங்கிகள் 99 இலங்கை – இந்திய ஒன்றிணைந்த நிறுவனத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், ஒப்பந்தத்திற்கு ஏற்ப, 50 வருடங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் குத்தகை அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான முதலீடு இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதோடு, 99 தாங்கிகளில் 10 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பாவனைக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு முதல் ஐஓசி நிறுவனத்தால் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வாடகையாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வருவதோடு, அது அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படுமென, இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கு மேலதிகமாக சம்பூரில் 50 – 10 மெகாவோட் வரையான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளன.

அத்துடன், தம்புள்ளையில் இருந்து திருகோணமலை வரை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக வீதிக்கான முதலீடுகளை பெற்றுத்தர இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

யாழில் இருந்து மன்னார் வரையான மற்றும் திருகோணமலையில் இருந்து மன்னார் வரையான வீதிகளையும் அபிவிருத்தி செய்ய இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருங்கால பொருளாதார அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படவுள்ள மிக முக்கிய தீர்மானங்களாக இந்த ஒன்றிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் காட்ட முடியும் எனவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.