ssபோதியளவு நீரினை பெற்றுக்கொள்ள முடியாமையால் யாழ்ப்பாணம் கப்பூது பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வடமராட்சி கப்பூது பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்ற போதிலும் பல வீடுகள் வெறுமையாகவே காட்சியளிக்கின்றன. இந்த பகுதிகளிலுள்ள கிணறுகளிலுள்ள நீர் உவராக காணப்படுவதால் அன்றாட பாவனைக்கு கூட பயன்டுபடுத்த முடியாதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியை விட்டு மக்கள் வெளியேறி வேறிடங்களில் குடியேறிவருகின்றனர். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக, வல்லிபுரக்கோயில் பகுதியிலிருந்து நீர் தாங்கி மூலமாக தினம் தோறும் இரண்டு மணித்தியாலங்கள் இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. குழாய் மூலம் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.