asவடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.

இதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார். இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர். இந்நிலையில், சபையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இதன்போது உள்ளே சென்றிருந்த சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. இதனையடுத்து, வடமாகாண அமைச்சர்களான, பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நியமனங்கள் மத்திய அரசாங்கத்தாலேயே வழங்கமுடியும். எமது திணைக்களங்களுக்கு உட்பட்டு உள்ள வெற்றிடங்களுக்கான விவரங்களை தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து, வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தாம் கைவிடுவதாக வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வடமாகாண சபைக்கு உட்பட்ட வெற்றிடங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் அற்ற நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தனர். இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தனது அறிக்கையில்,

இன்றுகாலை 9.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள். வடமாகாண சபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கனவே அவர்களுடன் நான் பேசிய விடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கேட்டார்கள்.

அண்மையில் முதலமைச்சர் மாநாட்டின் போது ஜனாதிபதி வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்கு கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்துவிட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக் காட்டினேன். பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.

அன்றையதினம் (06.05.2017) முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக் கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வடமாகாண சபை அவைத் தலைவர் தமக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தி ஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என கேட்டார்கள். அதற்கு நான் மாகாண சபையுடன் தொடர்புடையயார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனாலேயே நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசி வருகின்றோம் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

எமது மாகாண சபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின் மாகாண திணைக்களங்களில் 329 வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன் என்றார்.