வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் – உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும். வட கொரியா தொடர்பான விடயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார்.குசொங்கின் வட மேற்குப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வட கொரியாவோடு ஆழமான நட்புறவு கொள்ள விரும்புகிற தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்போற்றுள்ள மூன் ஜயே-இன் இந்த ஏவுகணை சோதனையை ‘பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்’ என்று விம்ர்சித்துள்ளார்..
இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து, தன்னுடைய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்றை தென் கொரியாவின் அதிபர் மூன் ஐயே-இன் கூட்டியுள்ளார்.
வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா தயாராக உள்ளது. ஆனால், அதற்கு வட கொரியா தன்னுடைய அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
கட்டுப்பாட்டுடன் இருக்க சீனா வலியுறுத்தியுள்ள நிலையில், வட கொரியாவுக்கு எதிராக ‘வலுவான தடைகளை’ விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் அவையால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வட கொரியா நடத்தியுள்ள தொடர் ஏவுகணை சோதனைகள், உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவோடு பதட்ட நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கிம் ஜாங்-உன்னை நல்லதொரு சூழ்நிலையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்த பின்னர், சூழ்நிலைகள் நல்லதாக அமைந்தால் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று வட கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இத்தகைய சந்திப்புக்களை உருவாக்குவதற்கு ஏவுகணைகளை அனுப்புவது சரியான வழியாக இருக்காது என்று தெரிவித்திருக்கும் ஹேலி, எம்முடைய நிபந்தனைகளை ஏற்காத வரை அவரோடு நாங்கள் சந்திக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
இதே நேரம் வட கொரியா இரண்டு வகையான கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால், அத்தகைய எந்த வகையும் இன்னும் சோதிக்கப்படவில்லை எனவும்.
ரஷ;யா இந்த ஏவுகணை சோதனையால் கவலையடைந்துள்ளதாகவும். வட கொரியாவின் ஒரேயொரு கூட்டாளியாக இருக்கின்ற சீனா, இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.