ஒலி ஒளிக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது

mulivaikal00முள்ளிவாய்க்கால் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மே 18 இன்று நடைபெற்றது,

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அதற்காக தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்.

இந்த நிகழ்வில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் முப்பது வருடங்களாக யுத்தம் ஒன்று ஏன் நடைபெற்றது?, அதன் உண்மையான நோக்கம் என்ன?, அந்த குறிக்கோளை நாம் அடைந்திருக்கின்றோமா? என்று கேள்வி எழுப்பினார்.

இனிமேல் ஒரு யுத்தம் நடைபெறாதிருப்பதற்கான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா?,  அத்தகைய மாற்றம் அவசியம்தானா?, அந்த மாற்றத்தை அடைய என்ன நடைபெற வேண்டும்;? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த நிழ்வு பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதற்கு யுத்தத்தின்போது நடந்தது என்ன என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அந்தப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அதே நேரம் மீண்டும் ஒரு யுத்தம் நடக்காமல் தடுக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப ஆட்சிமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

சம்பந்தன் உரையாற்றுகையில் குறுக்கிட்ட ஒருவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமைக்கு சம்பந்தன் பாராட்டுத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு அதற்குப் பதிலளிக்க வேண்டும் என கேள்வி கேட்க முற்பட்டதையடுத்து நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றினார். 

சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்கு வடமாகாண மக்களின் முதன்மைப் பிரதிநிதி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும் என்றும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் விளைவுகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

போர் முடிந்து எட்டு வருடங்களாகின்ற நிலையில் வன்முறைகளற்ற ஒரு சூழலில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வடக்கில் வைத்துக் கொண்டு இன ஐக்கியம், நல்லிணக்கம் பேசுவது குறித்து எழுந்துள்ள கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அவர் நினைவூட்டினார்.

பலதரப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைய பிளவுபட்டு கிடக்கும் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட குழந்தைகள், வயோதிபர்களையும் போராளிகள் என குறிப்பிடுபவர்கள் குறித்து தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எல்லோருடைய மனங்களிலும் கரும்புள்ளியைப் பதித்து சோகத்தை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் சோகதினம் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நாளாக அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பல பெண்கள், துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டுக் கதறியழுத காட்சிகள், அந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் வாழும் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை இது தொடர்பான நிகழ்வுகள் அரசியல் கட்சிகளினாலும் சிவில் அமைப்புகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இறுதிக் கட்ட போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தரமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திலும் அனுஷ;டிக்கப்பட்டது. நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாகரை கடலோரத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னனியின் ஏற்பாட்டில் மற்றுமோர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

https://www.youtube.com/watch?v=ojYeAUKvcEM