manoகடும் போக்கு பௌத்த அமைப்பு என கூறப்படும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்வதற்கு பல போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போலீஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் உரையாற்றியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை கைது செய்வதற்கு சிறப்பு போலீஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கலகொட அத்தே ஞானசார தேரோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் நீதிமன்றத்தினால் தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை – 4 மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸாரால் முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரிலே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.

போலீஸார் வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய இவருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் சமூகம் தராத நிலையிலே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சகத்திற்கு வந்த ஞானசார தேரோ
கலகொட அத்தே ஞானசார தேரோ இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஓழுங்கு அமைச்சர் போலீஸ் மா அதிபர் ஆகியோரை ஏற்கனவே கேட்டுள்ளனர்.

இரு நாட்களுக்கு முன்னர் சாலையில் வைத்து போலீஸார் இவரை கைது செய்ய முற்பட்ட வேளை போலீஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.