Posted by plotenewseditor on 28 May 2017
Posted in செய்திகள்
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (28.05.2017) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரையில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தினை கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள், அவ்விடயத்தில் எதிர்நோக்குகின்ற சவால்கள் பற்றியும் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிப் பிரச்சினைகள், சிறைச்சாலைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்புப் பிரச்சினை என்பன குறித்து மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பாக அங்கத்தவர்கள் அனைவரும் மிகவும் காரசாரமாக தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். எது எப்படியிருப்பினும், இப்பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றுக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
