பட்டியல் 1         தீபம் குழு

tna (4)நமது மக்கள் பிரதிநிதிகள் எதற்காக பாராளுமன்றம் சென்றார்கள்?. குடும்பத்திற்காகவா? ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கவா? பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவா? பதவி, புகழ் ஆசையா? இல்லவே இல்லை. அப்படியானால்?

அவர்கள் பாராளுமன்றம் போனது, இனப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை காண்பதற்கு. மக்களின்… அதாவது உங்களின் பிரச்சனைகளை பார்த்து பார்த்து தீர்த்து வைப்பதற்கு. வழக்கமாக இதைதானே அவர்கள் சொல்வார்கள்.
தேர்தல் மேடைகளில், ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் இனிக்க இனிக்க பேசும் நமது மக்கள் பிரதிநிதிகள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள்?. தேர்தல் மேடைகளில் ஏறி, இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என்பதை போல அடித்துவிடுபவர்… உங்கள் பிரச்சனைகளை என்னிடம் வந்து சொல்லுங்கள் என தியாகி உருவெடுப்பவர்கள், தேர்தலின் பின்னரும் அப்படியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்த சந்தேகமே, ஒரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்க வைத்தது. நமது மக்கள் பிரதிநிதிகளை வாக்களித்தவர்கள் சந்திக்கலாமா? நினைத்த மாத்திரத்தில் யாரை சந்திக்கலாம்? இப்படியான பட்டியல் ஒன்றை கடந்த வருடம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது இன்னொரு வடிவத்தில் பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளோம்.

றறற.pயசடயைஅநவெ.டம இது இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அமைந்துள்ள இந்த தளத்தில், பாராளுமன்றம் தொடர்புபட்ட அத்தனை விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சுய விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. அவர்களின் தொலைபேசி இலக்கமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் அமர்வு நாட்களில், பாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில் என இரண்டு தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டு வௌ;வேறு இலக்கங்களில் இருந்து அவர்கள் குறிப்பிட்டுள்ள இலக்கங்களை தொடர்பு கொண்டோம். கடந்த பதினைந்து நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து, யாரை சுலபமாக தொடர்பு கொள்ளலாம், யாரை சிரமப்பட்டு தொடர்பு கொள்ளலாம், யாரை தொடர்பு கொள்ள முடியாதென்ற ஒரு பட்டியலை இதிலிருந்து உருவாக்கியுள்ளோம். இந்த வாரம் யாழ், கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்.
1
த.சித்தார்த்தன்
எம்.ஏ.சுமந்திரன்
முதலாமிடத்தில் இரண்டு மக்கள் பிரதிநிதிகள் இடம்பிடித்துள்ளனர். யார் வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாமென வீட்டு கதவுகளை அகலத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் சித்தார்த்தன்… கட்சி, அரசியலமைப்பு உருவாக்க பணிகள் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் ஊடகங்கள் மற்றும் தொடர்பாடலில் கவனம் செலுத்தும் சுமந்திரன் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஒன்று தொடக்கம் மூன்று வரையான முயற்சியில் இவர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. அலுவலக தொலைபேசியில் மட்டுமல்ல, அவர்களது தனிப்பட்ட இலக்கங்களிலும் எப்பொழுதும் தொடர்பு கொள்ள முடிகிறது. பதிலளிக்க முடியாத இடங்களில் இருந்தால், அழைப்பை உதவியாளர்களிடம் மாற்றிவிடுகிறார்கள். உதவியாளர்களாவது பேசுவார்கள்.
கந்தரோடையிலுள்ள வீட்டில் யாராவது நுழைந்தால் எந்த தடங்கலுமில்லாமல் சித்தார்த்தனின் முன்னால் போய் நிற்கலாம். இந்த எளிமையை தொலைபேசி தொடர்பிலும் பேணுகிறார்.
சுமந்திரன் மீது கொழும்பு அரசியல்வாதி என ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதுண்டு. கடந்த இரண்டு வருடமாக அதை பொய்ப்பித்து வருகிறார் சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் அதிகமாக தங்கியுள்ள மக்கள் பிரதிநிதிகளில் அவரும் ஒருவர். பாதுகாப்பு அச்சுறுத்தல் சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் சந்திக்க வருபவர்களிற்கு கதவடைக்கவில்லை. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறையிலுள்ள அலுவலகங்களில் சாதாரணமாக சந்திக்க முடிகிறது.
2
டக்ளஸ் தேவானந்தா
ஈ.சரவணபவன்
சி.சிறிதரன்
இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இருப்பவர்கள் மூவர். உடனடியாக பிடிப்பது சிரமம். ஆனால் முயற்சி செய்தால் தொடர்பு எல்லைக்குள் வருவார்கள். முதல் சந்தர்ப்பத்தல் சில சமயங்களில் தொடர்பு கொள்ளலாம், இரண்டாம் மூன்றாம் சந்திப்புக்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்பது இவர்களின் நிலை.
சிறிதரனை நேரடியாக சந்திப்பதில் சிரமமில்லையென்பதை இங்கு குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற அமர்வுகள், வெளிநாட்டு பயணங்கள் இல்லாத சமயத்தில் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இருப்பார். யாழிலுள்ள வீட்டில் இருப்பதை விட, அலுவலகத்தில்தான் அதிகமாக இருப்பார். நேரில் சந்திப்பதற்கு இலகுவானவர்கள் பட்டியல் தயாரித்தால் சிறிதரன் நிச்சயம் முதல் சில இடங்களில் இருப்பார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொள்வதில் சிரமங்களுண்டு.
டக்ளஸ் தேவானந்தாவிற்கு கட்சிப்பணி, சரவணபவனிற்கு வர்த்தகம் என மேலதிக நெருக்கடிகள் இருப்பதாலோ என்னவோ இலகு சந்திப்புக்கள் சற்று சிரமமே. தனக்கு வரும் அழைப்புக்களிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டாலும், பின்னர் அந்த இலக்கங்களில் அனேகமானவற்றிற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பேற்படுத்தும் வழக்கமுடையவர். சரவணபவனிலும் இந்த வழக்கம் ஓரளவு உண்டு.
3
இ.அங்கஜன் 
இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் இருப்பவர் அங்கஜன் இராமநாதன். கடந்த தேர்தல்களில் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்கள் அங்கஜனிற்காக பணியாற்றியிருந்தனர். மற்ற வேட்பாளர்கள் பாரம்பரிய முறைகளில் பிரசாரம் செய்து மொக்கையடித்துக் கொண்டிருக்க, போஸ்ரர் வடிவமைப்பில் தொடங்கி சமூக ஊடகங்களை கையாள்வது வரை அனைத்திலும் முன்னின்ற அங்கஜன், தொடர்பாடலில் தற்போது சறுக்குவது ஆச்சரியமே.
குடும்பத்தினர் வெளிநாட்டில் வசிப்பதால் அங்கு இடையிடையே அங்கஜன் செல்ல வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் அவரது பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அங்கஜனிற்கு யாழ் நகரத்தில் அலுவலகம் இருந்தாலும், அதை தெரியாமல் தொலைபேசியில் தொடர்புகொள்பவர்களை கவனத்தில் கொள்ள வேண்டாமா?
4
மாவை சேனாதிராசா
விஜயகலா மகேஸ்வரன்
இறுதி இடத்தை பிடிப்பவர்கள் இவர்கள் இருவருமே. இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதென்பது குதிரைக்கொம்பு என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஊடக வட்டாரத்தில் உள்ளது. நமது முயற்சியிலும் அதுதான் நடந்தது. பாராளுமன்ற அமர்வு உள்ள நாட்களிலும், இல்லாத நாட்களிலும் தொடர்புகொள்ள குறிப்பிடப்பட்டிருந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டோம்… நமது தொலைபேசியின் இலக்கம் அழியும்வரை மாறிமாறி அழுத்தினாலும் பலன் கிட்டாது. சரி வேறொரு முயற்சி செய்யலாமென, அவர்களின் கையடக்க தொலைபேசிக்கு முயற்சித்தோம். அறிந்த, தெரிந்த இலக்கங்களிற்குத்தான் பதிலளிப்பார்களோ என்னவோ, மரியானா ஆழிக்குள் கல்லை போட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்த மாதிரியே இருந்தது. பதிலே கிடையாது.
இருவரும் அனேகமாக கொழும்பில்தான் தங்கியிருப்பார்கள். அதிலும் மாவை ஓரளவு பரவாயில்லை. மாதத்தில் சில நாட்களாவது மார்ட்டின் வீதியிலுள்ள அலுவலகத்திற்கு வருவார். ஆனால் தன்னைச்சுற்றி இரும்புக்கோட்டை அமைத்து வைத்திருக்கிறார் விஜயகலா. ஊடகவியலாளர்களினாலேயே தொடர்பு கொள்ள முடியாதென்றால், வாக்களித்த மக்களால்?
நன்றி : தீபம் (28.05.2017)