யாழ். உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை (01.06.2017) காலை 9.30மணியளவில் பாடசாலையின் அதிபர் கா.ரவீந்திரராஜா அவர்களின் தலைமையில் பாடசாலை கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. அ.அகிலதாஸ்(பிரதிக் கல்விப்பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி ம.திரேசா(பொறுப்பதிகாரி மாணவர் பாராளுமன்றம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், கொடியேற்றம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றதையடுத்து மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு மாணவர் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.
மாணவர் பாராளுமன்ற சபாநாயகரின் உரையைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்த 10மாணவ, மாணவியரும் தமது அமைச்சு முன்னெடுக்கவிருக்கும் திட்டங்கள் தொடர்பான பிரேரணைகளை தனித்தனியே முன்வைத்தார்கள்.
இதன்போது 10 பிரதியமைச்சர்களும் உடனிருந்தனர். பிரேரணைகளை அடுத்து சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து அதிபர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், மாணவர் பாராளுமன்ற பொறுப்பதிகாரி மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.