nanthiமுல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் மீனவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மக்களை வாழ வைக்கும் இந்த நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர்மட்டம் தற்பொழுது மிகக்குறைவடைந்துள்ளது. தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் எமது சிறு கடல்தொழில் பாதிப்படைந்துள்ளது.

குறித்த நந்திக்கடலில் தேங்கியுள்ள சேற்று மண்ணை அகற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் அதிகமான மழைநீரை தேக்கி வைக்க முடியும். இது தொடர்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆழ்கடல் மீன்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.