cowதிருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 கிலோவுக்கும் மேற்பட்ட இறைச்சி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி தலைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில்  கிளிநொச்சி முழங்காவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சோதனையிடப்பட்ட போதே இவை பிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் சந்தேக நபர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவ் இறைச்சியை கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைப்பதற்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கரைச்சி பிரதேச சபையினர் தங்களது கனரக வாகன பணியாளர்களைக் கொண்டு பாரிய குழியினை தோண்டி புதைத்துள்ளனர்.

மாடுகள் கொள்வனவு செய்தமைக்கோ, இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கோ, அல்லது கொண்டு செல்லப்படுவதற்கோ என எவ்விதமான சட்டரீதியான ஆவணங்களும் இவர்களிடம் காணப்படவில்லை.

இதேவேளை சந்தேக நபர்கள் இவரும்  இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.