masuthi01 masuthi02இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மத பிரிவினருக்கு எதிரான வன்முறை செயல்பாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டு. இது தொடர்பான விசாரனை நடத்த சட்டம் , ஓழுங்கு அமைச்சர் மற்றும் போலீஸ் மா அதிபதி ஆகியோயாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும். சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் வன்முறைகளை தூண்டுவோர் மற்றும் வன்முறைகள் சார்ந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில்அண்மைக்காலங்களில் கடும் தீவிரமடைந்திருக்கம் முஸ்லிம்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அக்கறை கொள்கின்றது.
இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதிருப்தி

இது போன்ற செயற்பாடுகள் காரணமாக 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அழுத்கமையில் வன்முறைகள் இடம்பெற்றன. இதனால் உயிரிழப்புகளும் சொத்து இழப்புகளும் ஏற்பட்டன. வன்முறைகளை தூண்டியவர்கள், இதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி இதுவரையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது புலனாகின்றது.

முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் , வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் மக்களை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள் சமூக வலைத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் பிரசாரங்கள் , முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாம் மதத்தையும் இலக்காக கொண்டு வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதால் ஆணைக்குழு கலக்கமடைகின்றது.

மேலும், கண்டிக்கப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பிற மதங்களுக்கு எதிரான சகிப்பற்ற தன்மை மற்றும் அண்மைக்காலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றது.

குறிப்பிட்ட ஒரு இனத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் வெறுப்பை வழங்கும் மற்றும் வன்முறைகள் போன்ற செயற்பாடுகள் 2007ம் ஆண்டு 56ம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசன சட்டத்திலும் இலங்கை தண்டனை கோவை சட்டத்திலும் குற்றமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை

இந்நிலையில் அவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வது அத்தியாவசியமானது.

சட்ட புத்தகங்களில் காணப்படும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் அத்தகைய செயல்பாடு சட்டத்தின் ஆட்சியின் மீது பாதகமான விளைவை ஏற்படுத்தும். எனவே நாட்டின் நலன் கருதி அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமாகும்.

எனவே முஸ்லிம் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பகைமை மற்றும் வன்முறைகளை தூண்டும் பேச்சுக்களை பிரசாரம் செய்வோர், வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் அதனை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு சட்டம் ஓழுங்கு அமைச்சருக்கும் போலீஸ் மா அதிபதிக்கும் ஆணை பிறப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக் கொள்கின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி என் டி உடேகம வினால் ஓப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மைக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் , முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றம் வாழ்விடங்களை இலக்கு வைத்து 30கும் மேற்பட்ட தாக்குதல் இடம்பெற்றள்ளதாக முஸ்லிம் சிவில் அமைப்புகள் கூறுகின்றன.

இது தொடர்பாக, முஸ்லிம் அமைச்சர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஓழுங்கு அமைச்சர் மற்றம் போலீஸ் மா அதிபதி ஆகியோரின் கவனத்திற்கும் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளன. பௌத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா மீதே அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.