eastதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான மூன்று பள்ளிக்கூட மாணவிகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பல்வேறு அமைப்புகளினாலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூதூர் பிரதேசத்திலுள்ள அரசு பள்ளிக்கூடமொன்றில் ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு சென்றிருந்த 6 – 8 வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 28 ஆம் தேதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான மூன்று மாணவிகளும் தற்போது திருகோணமலை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் பள்ளிக்கூட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அயல் பிரதேசத்தை 3 தொழிலாளர்கள் உட்பட 5 பேர் போலீஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.