Sri_Lankaஇலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் 51,249 சிறுவர்கள் ஒருநாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 2,329 சிறுவர்கள் மலையக பகுதிகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பாடசாலை செல்லாத பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கிராமிய பிரதேசங்களில் வசித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை வறுமை , நோய்கள் மற்றும் ஊனமுற்ற நிலை காரணமாக அவர்கள் இவ்வாறு பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போன்று பெற்றோர்களுக்கு கல்வி மீது போதிய ஆர்வம் இல்லாத காரணத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அந்த அறிக்கை சில சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைகளுக்குச் சென்று வருகின்ற காரணத்தினால் பாடசாலை செல்வதை தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.