Panneerஅதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டதாக அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு தலைமை வகிக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சென்னை திருவேற்காடு அருகே நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சிக்கான செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஓ.பன்னீர் செல்வம் இந்த தகவலை வெளியிட்டார்.

அதிமுக (அம்மா) அணியுடனான இணைப்பு என்கிற பேச்சுக்கே இனி இடமில்லை என அறிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் தமிழகம் முழுக்க அதிமுக (அம்மா) அணியினரால் நடத்தப்படும் கூட்டங்களுக்கு, அதிமுகவின் உண்மை தொண்டர்களிடையே அதிக வரவேற்பு உள்ளதை தன்னால் உணர முடிவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

அதனால் தங்களுக்காக திரளும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் துணையோடு, தர்ம யுத்தத்தை தொடரப்போவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இந்த முடிவு தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை என்றும், அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், இனியும் தங்கள் அணியோடு ஒன்று சேர முன்வராத மாற்று அணியில் உள்ள அதிமுகவினருக்கு மன்னிப்பே கிடைக்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் காரணமாக இனி, அதிமுகவின் இரண்டு அணிகளுக்கு இடையே இணைப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.