northவடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சிலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை வழங்கியிருந்தார்.முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சைகளும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சீ.வி.கே.சிவஞானம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபையின் ஏனைய பொறுப்புக்களின் புதிய நியமனம் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படாத நிலையில் முதலமைச்சரை மாற்றுவது தொடர்பில் மாத்திரம் செய்திகள் வெளியாகியுள்ளன.

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நேற்றைய தினம் கூடியிருந்த வடமாகாண சபையில். உரையாற்றிய முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை குறித்து முதலமைச்சர் உரை நிகழ்த்தக் கூடாது என ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன், அஸ்மீன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும், முதலமைச்சர் உரையாற்றியிருந்தார். இதனையடுத்து, ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

குறிப்பாக அமைச்சர்களான த.குருகுலராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன், அயூப் அஸ்மீன், இ.ஆனோல்ட், பசுபதிப்பிள்ளை, அரியரட்னம், பரம்சோதி, சிராய்வா, சிவயோகன் உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருந்த போதிலும் முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றியிருந்த நிலையில், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களை தாமாகவே பதவி விலக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது