amachsarவடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களை விடுமுறையில் அனுப்பும் நிபந்தனையை திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணங்கியுள்ளார்.

இதனை அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று பகல் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.முன்னதாக, வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களும், அவர்கள் மீது மீண்டும் விசாரணை செய்யப்படும்போது, ஒரு மாதம் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சம்பந்தன், விக்னேஸ்வரனுக்கு எழுதிய கடிதத்தில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த அமைச்சர்கள் இருவரும் தங்கள் மீதான விசாரணைகளிலும், சாட்சியம் அளிப்பவர்களுக்கும் இடையூறு விளைவிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தால், அவர்களை விடுமுறையில் அனுப்பும் நிபந்தனையை நீக்குவது பற்றி ஆலோசிக்கலாம் என விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், இந்த விடயம் குறித்து விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளான புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், சம்பந்தனிடம் இருந்து இதற்கான உத்தரவாதத்தைப் பெற முயற்சி செய்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் சம்பந்தனின் கடிதத்திற்குப் பதிலளித்து விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் இந்த இரு அமைச்சர்களுக்கு விடுத்திருந்த விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 17 ஆம் தேதி எழுதியிருந்த கடிதம் குறித்து குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், யாழ் ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருவரும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் கடிதம் ஒன்றை அளித்துள்ளதாக, தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உங்களுடைய கடிதத்தில் தெரிவித்திருந்த சில விடயங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டியிருக்கின்றது என சம்பந்தனுக்கான பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை விடுமுறையில் செல்ல வேண்டும் என கூறியது அவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தில் அல்ல என கூறியுள்ளார்.

அந்த அமைச்சர்கள் தமக்குரிய சம்பளங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தமக்குரிய வாகனங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அவர்கள் கொண்டிருக்க முடியும்.

அவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துகின்ற குழு அமர்வுகளை நடத்தும்போது, அதில் சாட்சியமளிக்கின்ற சாட்சிகளைப் பாதுகாப்பதற்காகவே அமைச்சர்களை விடுமுறையில் செல்லுமாறு கூறப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன என விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் ஓர் உத்தரவாதத்தை வழங்க முடியாத நிலையில் நீங்கள் இருப்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். இருப்பினும், சுதந்திரமான ஒரு விசாரணையில் குறுக்கீடு செய்யக் கூடாது என அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதாக நீங்கள் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தன்னுடைய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமான நீதி விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்திருப்பதைப் போலவே யாழ் ஆயரும், நல்லை ஆதீன முதல்வரும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விசாரணையில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

அத்துடன், கூட்டமைப்பின் கூட்டாளி கட்சிகளின் தலைவர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவரும், அமைச்சர்களுடன் இந்த விடயத்தில் தமிழ் மக்களுடைய நலன்களைக் கருத்தில்கொண்டு, கலந்துரையாடுவதாக தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு பொறுப்பேற்று இருப்பதன் அடிப்படையில், அமைச்சர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை நான் வலியுறுத்தப் போவதில்லை என விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.