இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை விடுதலைசெய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்குக் காரணம் என, பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவரே விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தீவிரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி வழங்கியதாக இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை அணியினர்மீது, லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஏழுவர் உயிரிழந்ததோடு, ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இதனால் இலங்கை வீரர்களுக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், சம்பவம் தொடர்பில் அறுவர் கைதுசெய்யப்பட்டதோடு, இதன் சூத்திரதாரியாக கருதப்பட்ட மலிக் இசான் என்பவர் 2015ம் ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.