சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்றும் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய முழு அளவிலான வேலை நிறுத்தத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. தமது எதிர்ப்பு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அரச தரப்பில் இருந்து இதுவரை எவரும் வரவில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் வைத்தியர் சஜித் மல்லவராச்சி கூறியுள்ளார். வேலை நிறுத்தம் இடம்பெறுகின்ற நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதாக வைத்தியர்கள் தெரிவித்தாலும், நாட்டின் பல வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் சீர்கெட்டுள்ளதால் பாரியளவான நோயாளிகள் பாதிப்படைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.