dfdசௌதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தம் மீது விதித்துள்ள நிபந்தனைகள், நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லாதவை என்று கூறி கத்தார் அவற்றை நிராகரித்துள்ளது. கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளும் நியாமானதோ, நிறைவேற்ற சாத்தியமானதோ அல்ல என கூறி கத்தார் வெளியுறவு அமைச்சர் அவற்றை நிராகரித்திருக்கிறார்.

சௌதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகியவை கத்தார் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவு அளித்து வருவதாக அவை குற்றஞ்சாட்டி வருக்கின்றன. பிற நிபந்தனைகளோடு, கத்தார் அரசால் நிதி ஆதரவு வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடிவிட வேண்டுமென இந்த நாடுகள் நிபந்தனை வைத்துள்ளன. இந்த நாடுகள் “கருத்து சுதந்திரத்தை தடுக்க” முயல்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக முன்னேப்போதும் இல்லாத வகையில், கத்தார் மீது ராஜீய மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், இரானும், துருக்கியும் கத்தாருக்கு அதிக அளவிலான உணவு மற்றும் பிற பொருட்கனை வழங்கி வருகின்றன. பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு அளிப்பது மற்றம் பிராந்திய ஸ்திரமின்மையை ஏற்படுத்துவது போன்ற தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கத்தார் மறுத்துள்ளது. இரானோடு தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும், துருக்கியின் ஒரு ராணுவ தளத்தை கத்தார் மூடிவிட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் இந்த நான்கு நாடுகளும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற 10 நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ளன.

“இந்த நிபந்தனைகைளை அரசு மீளாய்வு செய்து வருவதாக கூறப்படுகின்றது. கத்தார் மீது தடை விதித்துள்ள நான்கு நாடுகளும் “நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய” கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் புதன்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார். “அமெரிக்க வெளியுறவு செயலர் இந்த தடைகளை ஏற்படுத்தியுள்ள நாடுகளிடம் நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய நிபந்தனைகள் அடங்குகிற பட்டியலை உருவாக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார்” என்று கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான அல்-தானியை மேற்கோள்காட்டி அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது. “இந்த நிபந்தனைகள் மிதமானவையாக, நிறைவேற்றத் தக்கவையாக இருக்க வேண்டுமென பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இவர்களின் வரையறைகளுக்கு ஒத்ததாக இந்த நிபந்தனை பட்டியல் அமையவில்லை” என்று அல்-தானி கூறியுள்ளார்.

“கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதோடு தொடர்புடையதல்ல என்பதற்கு இந்த நிபந்தனை பட்டியலே சான்று” என்று கூறியிருக்கும் அல்-தானி, “இவை கத்தாரின் இறையாண்மையை கட்டுப்படுத்தி எமது வெளிநாட்டுக் கொள்கையை அடுத்தவர் முடிவு செய்வதாக உள்ளது” என்று தெருவித்திருக்கிறார். அல் ஜசீரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு அரசிடம் அல்லது நிர்வாகத்திடம் இருந்தும் வரும் அழுத்தங்களுக்கு தலை வணங்காமல், எமது ஊடகவியல் நடவடிக்கைகளை தொழில்முறையோடு பின்பற்றும் உரிமையை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தரை வழியாக சௌதி அரேபியாவில் இருந்து வருபவை மற்றும் கடல் வழியாக வரும் சரக்குக் கப்பல்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நிற்பது ஆகிய கத்தாரின் முக்கிய இறக்குமதிப் பாதைகளின் தொடர்பு சீர்குலைந்துள்ளது. கத்தாரை சுற்றியுள்ள பெரும்பாலான வான்பரப்பு, கத்தாரின் வான்வழி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சிறிய ஆனால் பணக்கார நாடான கத்தார், மாற்று வழிகளை கண்டுபிடித்து, இதுவரை பொருளாதார சரிவு ஏற்படாமல் தவிர்த்துள்ளது. நாட்டை விட்டு வெளிறே வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளில் வாழ்ந்து வரும் கத்தார் மக்கள் அல்லது குடும்பமாக வாழ்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தங்களுடைய நிபந்தனைகளை வரையறுப்பதற்கு சௌதி அரேபியாவும், பிற நாடுகளும் எடுத்துக்கொண்ட காலம் தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு “உயர்நிலை” புரவலர் என்று கத்தாரை குற்றஞ்சாட்டி, அந்த நாடு மீது கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருக்கிறார். இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ள எல்லா அரபு நாடுகளும் அமெரிக்காவின் நெருக்கிய கூட்டாளி நாடுகளாகும். ஆனால், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க தளம் கத்தாரில்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.