Anna (21)வட மாகாண சபையில் அண்மையில் நிலவிய கொதிநிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பலரின் வாய்க்கு அவலாக அமைந்திருந்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சிக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சமரச முயற்சிகள் பற்றியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைவு தவிர்க்கப்பட்டது பற்றியும் தினகரன் வாரமஞ்சரிக்கு மனம் திறக்கின்றார்…. -(வாசுகி சிவகுமார்)-

வட மாகாண முதலமைச்சரின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அவரைப் பதவி விலக்குவது தொடர்பாக வடக்கில் இருந்த கொதிநிலை சற்றே தனித்திருக்கின்றது. தற்போதைய சுமுக நிலை ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். வடமாகாண சபையில் மீண்டும் இயல்புநிலை தோன்றிவிட்டதா?

இப்போதைக்கு முதலமைச்சரின் மீது என்ன காரணத்துக்காக நம்பிக்கையில்லாhத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ, அது தீர்க்கப்பட்டு விட்டது. தமிழரசுக்கட்சி அதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வாபஸ் பெற்றுவிட்டது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குற்றம் சாட்டப்பட்;டவர்களை விலக்கி குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி தொடர்ந்தும் பதவியில் நீடிக்கச் செய்வது தொடர்பில் சிக்கல்கள் தற்போது இல்லை. ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை நீடிப்பதா இல்லாயாவென்பது மற்றொன்று. அது முதலமைச்சர் விரும்பினால் தொடரப்படக்கூடியது. அது வேறு, ஆனால் தமிழரசுக்கட்சி அதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வாபஸ் பெற்றுள்ளது, முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனே தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதில் எந்தவித சிக்கல்களும் தற்போது இல்லை. நான் நினைக்கின்றேன், வட மாகாண சபையின் 97ஆவது அமர்வு அண்மையில் நடந்திருக்கின்றது. வட மாகாண சபையின் வரலாற்றில் மிக அமைதியாக நடந்த ஓர் அமர்வாக இது வர்ணிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களே அதைச் சொல்லியிருக்கின்றார்கள். இனிமேலும் பிரச்சினைகள் வர மாட்டாதென நான் கூற மாட்டேன். எந்த அரசியலிலும், கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் தோன்றத்தான் செய்யும். அதனைத் தீர்த்தவாறேதான் தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல வேண்டும். 

வடக்கு மாகாணசபை பிளவுபடுவதில் இருந்து தடுப்பதில் உங்களது கட்சியின், குறிப்பாக உங்களின், ஏனைய பங்காளிக் கட்சிகளின் பங்கு எவ்வாறானதாக அமைந்திருந்தது?

எங்களுடைய பங்களிப்பே கூடுதலானது என்று நான் சொல்வேன். எங்களது கட்சி உறுப்பினர்கள் தாங்களாகவே இது தொடர்பில் முடிவெடுக்கலாம் என்று நான் கூறியிருந்தேன், ஆனால் எங்கள் கட்சி உறுப்பினர்கள் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஏனெனில் மக்களின் மனநிலை, அவரை பதவி நீக்கக்கூடாதென்பதில் மக்கள் காட்டிய தீவிரம் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு எங்கள் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் அவர்களது விருப்பின் பிரகாரமே நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்று நாங்கள் கூறினோம்.

ஏனைய கட்சிகள் கட்சி ரீதியாகவே முடிவெடுத்து விக்கினேஸ்வரன் ஐயாவை ஆதரித்தன. ஆகவே அனந்தி மற்றும் விக்கினேஸ்வரன் ஐயா உட்படப் 15பேரும் அதாவது ஆளும் கட்சியைச் சேர்ந்தோர் 15பேர் ஒருபுறமும் ஏனைய 15பேர் மறுபுறமுமாக ஆளும் கட்சி சரிசமனாக பிரிந்து நின்ற நிலை உருவானது. இது ஒரு வேண்டத்தகாத, அல்லது விரும்பத்தகாத ஒரு நிலையாகவே பார்க்கப்பட்டது.
ஒரே கட்சியில் இருந்து கொண்டு அதன் பிரதிநிதிகள் இவ்வாறு பிரிந்து நின்றது நிச்சயம் வரவேற்கத்தகாத ஒரு நிலைதான். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. அதற்காகத்தான் இப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் அதற்கான முயற்சிகளை எடுத்தோம். அது மாத்திரமல்ல, இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையினில் தீர்வினைக் காணமுடியுமா என்று, என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சம்பந்தன் அண்ணன் கேட்டுக் கொண்டார். அதனடிப்படையிலேயே அவர்களிருவருடனும் நான் தொடர்பு கொண்டேன். அவர்கள் இருவரையும் தொலைபேசியில் உரையாட வைப்பதில் ஈடுபட்டேன். என்னுடன் செல்வம் அடைக்கலநாதனும் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பின்னர் இணைந்து கொண்டனர். மூவருமாக எங்களால் கொடுக்கப்பட கூடிய அழுத்தங்கள் மூலம் இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வழிவகை செய்தோம். நாங்கள் எங்கள் முயற்சியில் ஓரளவு முன்னேறியபோது அதனை நிறைவேற்றிவைக்கும் வகையில் நல்லை ஆதீன தலைவரும் ஆயரும் தங்கள் பணியினைச் செய்திருந்தனர். விக்கினேஸ்வரன் ஐயாவை பதவி விலக்க வேண்டும் என்கின்ற எண்ணம் சம்பந்தன் அண்ணருக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் உள்ள வேறு சிலரே அவ்வாறு எண்ணுகின்றனர். அதேபோல, கூட்டமைப்பினை விட்டுப் பிரந்துசெல்ல வேண்டும் என்கிற எண்ணம் விக்கினேஸ்வரன் ஐயாவிடமும் இல்லை. அதனால்த்தான் எங்களது சமரச முயற்சிகளும் இலகுமாக அமைந்துவிட்டதென்றே நான் சொல்வேன்.

வட மாகாண அமைச்சர்களின் பதவி விலகல்களுக்கப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் இடையிலான முறுகல் நிலையின் உச்சமாகவே முதலமைச்சரை பதவி விலக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பார்க்கப்படுகின்றனவே?

அப்படித்தான் ஒரு பொதுவான எண்ணப்பாங்கு நிலவுகின்றது. அது தெளிவாகவும் தெரிகின்றதே? ஏனெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றைத் தவிர, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது விடயத்தில் இரண்டாகப் பிரிந்திருந்தது. தமிழரசுக் கட்சிக்கும் விக்கினேஸ்வரன் ஐயாவுக்குமிடையில் நிலவிய முறுகல் நிலைதான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை தமிழரசுக் கட்சியினரைக் கொண்டு சென்றிருக்கின்றது என்பது தெளிவாகவே தெரிகின்றது.

தமிழரசுக்கட்சிக்கும் வட மாகாணசபை முதல்வருக்குமிடையிலான முறுகல் நிலை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம், அதனுடனான முதல்வரின் ஊடாட்டம் என்பனவற்றைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கக் கூடுமோ?

தமிழ் மக்கள் பேரவை என்பது ஒரு அரசியல் கட்சியல்ல. அதுவொரு அழுத்தக்குழு. அழுத்தங்களைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. பேரவையால் நடத்தப்பட்ட எழுக தமிழ்ப் பேரணிகளில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அதனை விரும்பவில்லை. அது தொடர்பில் பல பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இருந்தாலும் பேரவையின் ஆரம்பம்தான் இதற்குக் காரணம் என்று நான் கூறமாட்டேன். வேறு பல காரணங்கள் அதற்கு உள்ளன. தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் சிலருக்கும் முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், செயற்பாடுகள் தான் அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை கொண்டு சென்றிருக்கின்றது என்றே நான் சொல்வேன்.

வட மாகாண சபையின் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றை விசாரிக்கவென முதலமைச்சர் தானே விசாரணைக் குழுவொன்றினை நியமித்து, அவ்விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாது அமைச்சர்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுத்திருந்தார். இது எதனை உணர்த்துகின்றது? தான் நியமித்த குழுவின் மீதே முதல்வர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதனையா சுட்டுகின்றது?

அதற்கு நான் பதிலளிப்பது சிறந்ததாக அமையாது. இதில் முக்கியமானது, அவர், நால்வரையும் பதவி விலக்கவில்லை. இருவரை பதவி விலக்கினார். இருவரது மேலதிக விசாரணைகள் முடியும் வரை விடுமுறையில் செல்லுமாறு பணித்தார். அதனை ஒரு சரியான நிலைப்பாடாக நான் கருதவில்லை. விசாரணைகள் ஆரம்பித்தபோதே நால்வரையும் விடுமுiறியல் அனுப்பியிருக்க வேண்டும். எனவே தனிப்பட்ட ரீதியில் அதனை ஒரு சரியான நிலைப்பாடாக நான் கருதவில்லை. தவறுகள் எங்கிருந்தாலும் எங்களது ஒரேயொரு நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடக் கூடாது என்பதுதான். அவ்வாறுதான் தொடர்ந்தும் செயற்படுவோம். இன்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உடைய வேண்டும். அவ்வாறு உடைவதனால், அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய சிங்கள பேரினவாத சக்திகள், பேரினவாத சக்திகள் மாத்திரமல்ல, அரசுக்குள்ளேயே பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள். அதனைடிப்படையிலேயே தான் இந்த அரசியலமைப்பு மாற்றம், நியாயமான தீர்வொன்று கிட்டும் வரை அல்லது இப்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் ஒரு முடிவு நிலைக்கு வரும்வரையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓர் உடைவினை நாங்கள் அனுமதிக்க முடியாது. அது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பின்னடைவினையே தரும். அரசு மிக இலகுவாக பழியினை தமிழ்த் தரப்பு மீது போட்டுவிட்டு தான் தப்பிக்கும் வழிகளைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றது. எனவே எக்காரணம் கொண்டும் தமிழ் கூட்டமைப்பு உடைந்துபோவதனை நாங்கள் அனுமதியோம். எங்களது தவறினால் தான் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க முடியாமல்போனது என்பதனை சர்வதேசத்துக்குக் காட்டவே அரசு சந்தர்ப்பம் பார்த்திருக்கின்றது. எங்கள் பக்கத்தில் தவறிருப்பதாகவே சர்வதேசமும் எண்ணினால் போதும், அது அரசுக்கு பாரிய வெற்றிதான். சர்வதேசம் தொடர்ந்தும் எங்களுக்கு தரக்கூடிய ஆதரவினை நாங்களாகவே இழந்துவிடக் கூடாது. எனவேதான் கூட்டமைப்பின் ஒற்றுமை, எமது அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலமைப்பொன்றின் தேவை பற்றியெல்லாம் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதில் தெற்கு அதிகளவு தீவிரம் காட்டி வருகின்றது. ஆனாலும் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கை விட்டு தமக்குள் முரண்பாடுகள் இருப்பதான தோற்றத்தினையே உண்டு பண்ணுகின்றனவே? முஸ்லிம் அரசியல் தலைவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்றதொரு கூட்டமைப்பின் உருவாக்கத்தினை தங்கள் கட்சிகளுக்கிடையில் வேண்டி நிற்க, தமிழ்க் கூட்டமைப்பினர் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனரே?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது நான்கு கட்சிகளின் கூட்டு. நான்கு கட்சிகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும். அவ்வாறான கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்லவேண்டும். அவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய கடமை நிச்சயமாக சம்பந்தன் அண்ணருடையது. நான் நினைக்கின்றேன், இந்த வடக்கு மாகாண சபை விடயத்திலே, அவர் தனது கடமையை நிச்சயமாகச் செய்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடக் கூடாதென்பதில் அவர் அக்கறையுடன் செயற்பட்டிருக்கின்றார்.

பொதுவாக வட மாகாண சபையின் மீது பலரும் சுமத்தும் குற்றச்சாட்டு அதுவொரு வினைத்திறன் அற்ற சபையென்பது. அவ்வாறான ஓர் நிர்வாக அலகினைக் கூட தமிழர்களால் செவ்வனே செய்ய முடியாதிருக்கின்றது என்பது. அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்தக் குற்றச்சாட்டு பலராலும் சுமத்தப்படுவதுதான். வட மாகாண சபை ஒழுங்காச் செயற்படவில்லை என்பதனையும் நான் பார்க்கின்றேன். இனிமேலாவது, அது ஒழுங்காகச் செயற்படவேண்டும். அதன் காலம் முடிவடைய இன்னமும் ஏறத்தாழ ஒரு வருட காலமே உள்ள நிலையில் இனிமேலாவது அது வினைத்திறனுடன் இயங்கவேண்டும். பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்கனவே வட மாகாண சபையின் மீது நம்பிக்கையினை இழந்திருக்கின்றார்கள். ஆனால் அதனை நாம் இழந்து விட முடியாது, எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து தாங்கொணா துயரத்துடன் எங்கள் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களது வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவர்களது இழப்புகளுக்கு ஒரு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் மாகாண சபைக்கு பெருவாரியாக வாள்ளித்தார்கள். அந்த நம்பிக்கை இப்போது மக்களிடம் குறைவடைந்து வருகின்றது. அதில் சந்தேகமில்லை. அதற்கு ஓர் காரணம் தனிநபர்கள் மற்றும் கட்சிகளிடையேயான போட்டித் தன்மையாகும். அது மாத்திரமல்ல விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு எதிராக அங்கு காணப்பட்ட நிலைமைகள். இதில் இன்னுமொன்றினையும் குறிப்பிடவேண்டும். அவர் ஒரு நீதியரசராக இருந்தவர். சட்டம், ஓழுங்கு இவற்றை சீர்தூக்கிப் பார்க்குமளவுக்கு அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பில் அவர் கவனம் செலுத்துவது குறைவாகவே இருந்துள்ள. இதனை ஒரு குறைபாடாகவே நான் பார்க்கின்றேன்.
(நன்றி தினகரன் வாரமஞ்சரி (25.06.2017)