cv vigneswaranவட மாகாண கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முதலமைச்சர் என்ற வகையில் தாமே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போருக்குப் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக, உரிய செயன்முறைகளுக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக, உரிய நியமனத்தை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பதவி விலகியுள்ள அமைச்சர்களின் அமைச்சுக்களை தாமே மேற்பார்வை செய்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.