வடமாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள் என இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சன்தூ வட மாகாண அரசியல் பிரமுகர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். முறையான திட்டங்கள் வகுக்கப்படுமாயின் மாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் குறிப்பிட்டார். பதவி ஏற்றதன் பின்னர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார். அந்த வகையில், இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய போது, பல்வேறு விடயங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளேன். அதனடிப்படையில், பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டி துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம் உட்பட மன்னார் ஊடாக தனுஷ்கோடிக்கான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அதில் சில வேலைத் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்திற்கு வடமாகாணத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளள் இவ்வாறான வாய்ப்புக்களை தவற விடுவதாகவும் வடமாகாணத்தில் இருந்து 4 விண்ணப்பங்கள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 50 பேருக்கான வாய்ப்புக்கள் கிடைப்பதினால், அந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்த தவறுவது மன வேதனை தருவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை மக்கள் ஏற்று அவற்றினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அரசியல் ரீதியான விடயங்களை அறிந்து கொள்ளவதற்கு அவர் அதிக ஈடுபாட்டினை காட்டவில்லை. வடமாகாணத்தினை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான வழிகளை சிந்தியுங்கள் அதற்கான முழு ஒத்துழைப்பினையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.