paffrelஇலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடுத்த மாதம் இறுதியில் வெளியாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு குடிவரவுப் குடிப்பெயர்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 3 வாரங்களில் இந்த தகவல்களை வழங்க முடியும் என்று, குடிவரவு மற்றும் குடிப்பெயர்வுத் திணைக்களம் தமக்கு தெரியப்படுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது. இந்நிலையில், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலும் தகவல் திரட்டப்படுன்றன.  இதேவேளை, உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடாத்தப்படாமல் தொடர்ந்தும் காலதாமதமானால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றமே எட்ட வேண்டும். இந்த தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்படுமானால் அது தொடர்பான நாட்காட்டியை தயாரிக்க நேரிடும். இல்லையெனின் தேர்தல் தொடர்பான விடயங்களுக்கான நீதி கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.