வவுனியா பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த ஐவரில் மூவரை திருகோணமலையில் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் மூன்று முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஈஸ்வரன் தர்சா என்பவர் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு காணாமல் போயுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரையும் காணவில்லை என ஈச்சங்குளம் பொலிஸில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மாணவி தொடர்பான விசாரனைகளை ஈச்சங்குளம் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதேவேளை நேற்றையதினம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று திருகோணமலை கடற்கரைப் பகுதியில் வைத்து திருகோணமலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாமாகவே யாருக்கும் தெரியாமல் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம், கட்டையர்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 14 வயதுடைய ஜீவசங்கர், வினித், அட்சயன் எனும் மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போய் மீட்கப்பட்ட மாணவர்கள் ஆவர். ஏனைய காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.