யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய கட்டிடத் தொகுதிகள் நேற்று திறந்து வைக்கப்படடுள்ளன. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்கா சண்டு, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் பொறியியல் பீடத்திற்கான இயந்திரவியல், உற்பத்தி அலகு, செயல் முறை அலகு ஆகிய கட்டிட தொகுதிகளும், விவசாய பீடத்தில் விளையாட்டு, கணிணி, மற்றும் நூலக கட்டிட தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டு பீடங்களுக்கும் தலா 300 மில்லியன் ரூபா இந்திய அரசின் உதவியின் மூலமே இக்கட்டிடத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துலக தமிழ் பல்கலைக்கழகமாக கட்டப்பட்டு முடிவுறாத நிலையில் காணப்பட்ட சில கட்டங்களை கொண்டிருந்த அறிவியல் நகர்ப் பிரதேசம் 2009 யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இராணுவ முகாமாக காணப்பட்டது.
பின்னர் அது மிகப்பெரும் இராணுவப் பயிற்சி முகாமாக மாற்றப்படவிருந்த நிலையில் அரசியல்வாதிகள் சிலரது முயற்சியின் காரணமாக இராணுவத்திடமிருந்து மீட்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது.