caffeஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. கபே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்தில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்து காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கும், ஏனைய நிறுவனங்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை குறித்த குழு முன்னெடுத்துவந்தது.

இந்த ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 800 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 250 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அதன் அறிக்கைகள் காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவிடம் சமரப்பிக்கப்பட்டுள்ளது. மொத்த முறைப்பாடுகளில் 700 முறைப்பாடுகள் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராகவும், 30 முறைப்பாடுகள் நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் தொடர்பிலும், 70 ஏனைய முறைப்பாடுகளும் ஆகும். குறித்த காரியாலயம் சர்வதேச தரத்திலான அதியுயர் செயற்திறன் மிக்க ஒரு கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரியாலயத்திற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் அந்த காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது