dwewவாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம், மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக, இன்றுக் காலை ஆரம்பமானது.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களை விழிப்பூட்டும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், இவ்வூர்வலம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் மட்டக்களப்பு நகரை ஊடறுத்து தேர்தல்கள் அலுவலகம் வரைச் சென்றது. ‘எங்கள் வாக்கு எங்கள் எதிர்காலம்’ வாக்காளர்களே அரசர்கள்’ ஜுன் மாதம் வாக்காளர் உரிமைகளைப் பதிவு செய்து உறுதிப்படுத்தும் மாதம்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் சென்றோர் தாங்கியிருந்தனர்.

இவ்வூர்வலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச் ஹ_ல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு தேர்தல்கள் உதவி ஆணையாளர் மற்றும் அலுலர்களால், இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வாக்காளர் உரிமையை வலியுறுத்தும் வகையில், வீதி நாடகமும் விஷேட உரைகளும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.