யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதன்படி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட 54 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில், இன்று இடம்பெறவுள்ள விசேட வைபவத்தின் போதே, இவை விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலங்கள் விடுவிக்கப்பட்டபின் மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த பிரதான குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியிருக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.