தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம் திகதி வியாழக்கிழமை முதல் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலியுடன் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. வீரமக்கள் தின இறுதிநாளான எதிர்வரும் 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேசுவரன் நினைவில்லத்தில் மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்ல புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதோடு, வடக்கு கிழக்கில் விளையாட்டுப் போட்டிகள், ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள், பொது அறிவுப்போட்டி, சமூகநலப் பணிகள் என்பனவும் இடம்பெற்று வருகின்றன. மேலும் வீரமக்கள் தினத்தன்று ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்வி ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.