நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற மகாநாயக்க தேரர்களின் கூற்றுக்கு தாம் இணங்கப் போவதில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மீள் பரிசீலணை செய்யுமாறு, தாம் மகாநாயக்கர்களிடம் கோருவதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காகவே, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முன்னின்றனர், எனவும் அத்துடன், புதிய யாப்பு மூலம் அனைவருக்கும் நியாயமான தீர்வை வழங்க வாய்ப்புள்ளதாகவும் எனவே மகாநாயக்கர்கள் இந்த முடிவை மீள்பரிசீலணை செய்வதே பொருத்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது அனைத்து இனங்களும் இணைந்து, அனைவரும் ஏற்கக் கூடிய புதிய அரசியலமைப்பை வெளியிட கலந்துரையாடி, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு, அரசியலமைப்புச் சபை இரண்டு வருடங்களாக அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அனைவரும் ஏற்கக் கூடிய புதிய அரசியலமைப்பை வெளியிடுவதைத் தடுப்பதன் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் உடைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் பெரும்பான்மையினரின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருந்ததோடு, அவை சிறுபான்மை மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள சுமந்திரன், இதனாலேயே புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.