28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்க மண்டபத்தில் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட இணைப்பாளருமாகிய மகாதேவன் சிவநேசன் (பக்தன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் உயிர்நீத்த கழக உறுப்பினர்களின் உறவுகள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், ஊர்ப்பெரியோர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் 28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட இணைப்பாளருமாகிய மகாதேவன் சிவநேசன் (பக்தன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் ரிமைண்டர் விளையாட்டுக் கழகம் நடாத்திய காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி என்பவற்றின் இறுதிப் போட்டிகள் நேற்று காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இதில் காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சொறிக்கல்முனை எல்மோ அணியை தோற்கடித்து சொறிக்கல்முனை சான்றோகுருஸ் அணி வெற்றிபெற்றது. மேலும் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து தம்பிலுவில் ரேன்ஜஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு நினைவுக்கிண்ணம் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் காரைதீவு மக்களுக்கு பல வழிகளிலும் சமூக சேவைகள் புரிந்த பெருந்தகைகள் வு.வரகுணம் (பேராசிரியர்), யு.வரதராஜன்(வைத்திய நிபுணர்), மு.முருகேசு(ஐPவு), இரா.கிருஸ்ணபிள்ளை(ஓய்வு பெற்ற அதிபர்), P.கிருபாகரன்(முன்னாள் வடகிழக்கு மாகாணசபை நிதியமைச்சர்), ஏ.ஜெகநாதன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வுகளுக்கான அனுசரணையை பிரான்ஸில் வதியும் கழக உறுப்பினர் ஜோன்சன் அவர்களும், ஜேர்மனியில் வதியும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.ரி இரவி அவர்களும் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.