அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தமிழ்த் தின நாடகப் போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு வட மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தனர். மேற்படி தமிழ்த் தின நாடகப் போட்டியில் மேடையேற்றப்பட்ட நாடகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் நோக்குடன் வெள்ளவத்தை தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 17.07.2017 திங்கட்கிழமை மாலை 6.30அளவில் மேடையேற்றப்பட்டதோடு, கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். குறித்த நாடகம் மிக சிறப்பாக ஸ்கந்தவரோயக் கல்லூரி மாணவ, மாணவியரால் நிகழ்த்தப்பட்டது. அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மிக அர்ப்பணிப்போடு சேவை செய்து வருவதை அது தெளிவுபடுத்தியது. இதனால் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து ஸ்கந்தவரோதய மாணவ, மாணவியரின் நாடகம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.
கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது இரு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இதில் மாணவ, மாணவியர் மிகச் சிறப்பாக பங்குபற்றியிருந்தார்கள். மேற்படி நிகழ்வில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரும், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான், பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளர், அங்கத்தவர்கள், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னைநாள் உப அதிபர் புவனேந்திரராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியில் நாடகத்தை நெறியாள்கை செய்த ஆசிரியர்கள், அதிபர், மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.