யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார்மீது இன்றுமாலை 5.10 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் தனது வாகனத்தில் யாழ். நல்லூர் கோயில் பின் வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் ஊடகங்களுக்கு கூறுகையில், குறித்த நபர் எம்மை நெருங்கியபோது எனது மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜண்ட் துப்பாக்கியை பறிக்க முற்பட்டார். நான் வாகனத்தை விட்டு இறங்கி பிஸ்டலை விடுடா என்று கத்தி ஓடியபோது துப்பாக்கிப் பிரயோகம் சரளமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் சார்ஜணுக்கு துப்பாக்கிச்சூடு பட்டது. தொடர்ந்து என்னுடைய பக்கம் துப்பாக்கி நபர் திருப்பியபோது பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக ஓடி என்னை காருக்குள் செல்லுமாறு கூறிவிட்டு குறித்த நபரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். மீண்டும் அந்த நபர் நான் இருந்த பக்கம் திருப்பி பொலிஸ் கான்ஸ்டபிளை நோக்கி சுட்டபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் இருந்த மெய்க்காவலரை ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்.
நான் வழமையாக டெம்பிள் ரோட்டால்தான் போய் வருவது வழக்கம். நான் போய் வந்ததை அவதானித்ததின் அடிப்படையில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. ஏனென்றால் அண்மைக்காலமாக நடைபெறுகின்ற பாரதூரமான வழக்குகள் அனைத்தையும் கையாளுகின்ற நீதிபதியாக இருப்பதால் அத்தகைய ஒரு சூழ்நிலை இருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்.
ஏனெனில் அவர் அந்த துப்பாக்கியை லோட் பண்ணிய விதம், மிகவும் ஒரு அனுபவமுள்ள ஒரு நபர் லோட் பண்ணிய அனுபவத்தை நான் பார்த்தேன். துப்பாக்கியை லோட் பண்ணியுடன் சார்ஜண்ட் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து மற்றைய பக்கம் திருப்பி நான் ஓடியபோது என்னுடைய திசைப்பக்கம் திருப்பி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்தபோதுதான் பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து என்னை காருக்குள் போகும்படி சொல்லி அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.
இந்த விடயம் என்னைப் பொறுத்தவரை நீதித்துறைக்கு விடபப்ட்ட ஒரு சவாலாகவே நான் கருதுகின்றேன். அண்மைக்காலமாக நடைபெறுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது.
ஏனெனில் என்னுடைய பொலிஸ் சார்ஜணை ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய பொலிஸ் கான்ஸ்டபிளையும் ஒருவருக்கும் தெரியாது. அவர்களை இலக்கு வைக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆகவே இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சும், நீதியமைச்சும், நீதிச்சேவை ஆணைக்குழுவும், எமது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றார்.