D.sithadthan MPமகிந்த ராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் நடக்காத விடயங்கள் ஆட்சிமாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட்டால் நடைபெறும் என்ற தீவிரமான நம்பிக்கை கொண்டுதான் தமிழ் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் தங்களுடைய சாதாரண பிரச்சினைகளான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நீதி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களிலாவது ஆட்சி மாற்றம் ஒரு சாதகமான தீர்வை பெற்றுத்தரும் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆனால்

இந்த ஆட்சி மாற்றம் தமிழ்மக்களுக்கு எந்தவொரு விடயத்திலும் தீர்வை பெற்றுத்தரவில்லை என்று தெரிவித்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எங்களுக்கு கிடைத்திருக்கும் சில சந்தர்ப்பங்களுக்கு எங்களால் முடிந்தளது ஒத்துழைப்பை இந்த அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு பெரியளவில் நம்பிக்கையில்லாவிட்டாலும். எங்கள் மீது பழி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சில விடயங்களில் பொறுமையுடன் பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

 ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணல்களிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(ந.லெப்ரின்ராஜ்)
கேள்வி :- புதிய அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுக்களின் கீழ் இயங்கும் உபகுழுவொன்றின் தலைவராக நீங்கள் செயற்பட்டு வந்தீர்கள். இந்நிலையில் இந்த முன்னெடுப்பு தற்பொழுது எந்தக் கட்டத்தில் உள்ளது?
பதில் :- அரசியல் யாப்பு முன்னெடுப்பு இன்று ஒரு தேக்க நிலையில் இருப்பதையே அவதானிக்க முடிகிறது. 
மகாநாயக்க தேரர்களுடைய குரல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசிய கட்சிகளிடையே காணப்படுகின்ற சில விடயங்கள் தொடர்பான முரண்பாடுகள், முக்கியமாக ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயங்குவது போன்ற விடயங்களை அவதானிக்கும் பொழுது அரசியல் யாப்பு முன்னெடுப்பு பின்னடைவை கண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் கூட, இந்தச் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் என்னுடைய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வந்தேன். அதன் அடிப்படையில் தான் எங்களால் இயன்றளவுக்கு – எங்களுடைய வரம்புக்குட்பட்டளவுக்கு மேற்படி செயற்பாட்டுக்கு நாங்கள் ஆதரவளித்தோம்.
முழுமையாக நம்பிக்கையில்லாவிட்டாலும் நாங்கள் எங்களுடைய முயற்சிகளை கைவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இந்தப் பயணத்தில் எங்களை இணைத்துக் கொண்டோம். இன்றைய சூழ்நிலையில் எங்களுக்கு இருக்கும் ஒரேவழி இதுதான். இந்த செயற்பாட்டிலிருந்து நாங்கள் வெளியே வந்தால் அடுத்தது என்ன? என்ற கேள்விக்கு சரியான விடையை எங்களால் காணமுடியாத நிலைமையொன்று இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த செயற்றிட்டத்தில் நாங்கள் பங்குபற்றினோம்.
மேலும் அரசியல் யாப்பு செயற்பாட்டிலிருந்து, நாங்கள் (கூட்டமைப்பு) வெளியேறுவோமாகவிருந்தால் அதனை கூட்டமைப்பு தான் குழப்பிவிட்டது என்ற பார்வையை சர்வதேசத்திற்கு காட்டும் முயற்சிகள் நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் சர்வதேசம் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனை இல்லாமல் போய்விடும். இவ்வாறான விடயங்களை அடிப்படையாக வைத்துத்தான் நாங்கள் இந்த பயணத்தில் பொறுமை காத்து பயணித்து வருகின்றோம். எங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
கேள்வி :- இன்று தென்னிலங்கை அரசியல் மேடையில் இடம்பெற்றுவரும் சம்பவங்களை பார்க்கும் பொழுது, முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் யாப்பு விவகாரமும் கடந்தகாலங்களைப் போன்று தமிழ் மக்களை ஏமாற்றிவிடும் என்ற நிலைமையை தோற்றுவித்திருக்கிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு…
பதில் :- என்னைப் பொறுத்தவரையில் நான் ஏமாற்றமடையமாட்டேன். ஏனெனில் இதுதான் நடக்கும் என்பதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கு தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்கியதற்கு காரணம், சாதாரண பிரச்சினைகளான காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி, சிறைக் கைதிகளுடைய விடுதலை, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் தான். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் மேற்கூறிய விடயங்களில் ஒரு விடயத்தில் கூட இந்த அரசாங்கம் நியாயமாக நடக்கவில்லை. 
வேலைவாய்ப்பு விடயத்தில் கூட இந்த அரசாங்கம் நியாயமாக நடக்கவில்லை. சிற்றூழியர்களை கூட தென்னிலங்கையிலிருந்து தெரிவுசெய்து வட – கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பும் நிலைமையே இன்றும் நடைபெற்று வருகிறது. இது விடயமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கூட்டமைப்பு முறைப்பாடுகளை செய்திருக்கிறது. ஆனால், இதுவரை அவை தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியதாக இல்லை. தொடர்ந்தும் அந்த நடவடிக்கைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
எனவே மேற்கூறிய சிறிய விடயங்களிலாவது முன்னேற்றம் ஏற்படும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவற்றில் கூட சிறியளவு முன்னேற்றம் கூட நடைபெறாதது அனைவருக்கும் ஏமாற்றமாகவே இருக்கிறது.
கேள்வி :- அரசாங்கத்தில் இருக்கின்ற சிலர் சர்வதேசத்தை பகைக்கும் ஒரு நிலைமையை இன்று அவதானிக்க முடிகிறது. கடந்தவாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் பென் எமர்சனுக்கும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்குமிடையில் ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவற்றை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் மிக முரண்பாடாக சர்வதேசத்தை பகைத்துக் கொள்கின்ற அதேவேளை, தீர்வு விடயத்திலும் பல முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சி என்று கூறிக்கொள்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முரணானவையாக இருக்கின்றன. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் கவனத்திலெடுத்து நிறுத்த வேண்டும். 
யுத்தத்துக்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றத்தினூடாக அடையப்பெறும் நியாயமான அதிகாரப் பரவலாக்கல்தான் இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான நாடாக மாற்றும் என இலங்கை வந்திருக்கும் ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தை தெற்கில் இருக்கின்ற பலர் உணர்ந்திருந்தாலும் கூட, அவர்களுடைய முழுப் பார்வையும் அடுத்த தேர்தலை நோக்கியதாக இருக்கிறது. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் நாட்டுக்கு மிகத்தெளிவாகக் கூறியிருந்த போதிலும் அவர் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு 62 வீதமான வாக்குகள் கிடைத்திருந்தன.
எனவே, சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் அரசியலுக்காக இனவாதம் பேசுகின்றவர்களால் தான் இந்த நாடு தொடர்ந்தும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது என்பதே என்னுடைய நிலைப்பாடு.
கேள்வி :- மகாநாயக்க தேரர்களை கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா?
பதில் :- இதுவரை அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களைச் சந்தித்து எங்களுடைய நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய கருத்து. அவர்களுடன் ஒரு சுமுகமான உறவை வைத்துக் கொள்வது அவர்களுடைய வேகத்தை சற்று தணிக்கக்கூடியதாக இருக்கும் என நான் நம்புகின்றேன். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்க வேண்டும். ஏனெனில் இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டுவிட்டு மீண்டும் புதிதாக ஒரு விடயத்தை ஆரம்பிப்பது என்பது காலத்தை விரயம் செய்யும் நடவடிக்கை என்பதுடன், தீர்வைப் பெறும் விடயம் இன்னுமின்னும் பின்னடைந்து கொண்டு செல்லும்.
தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை சிங்களத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு கூட்டமைப்பு எடுத்துக்கூறவில்லை என்ற குறைபாட்டை பலர் கூட்டமைப்பு மீது சுமத்தி வருகிறார்கள். அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. அதனை செய்வோம்.
கேள்வி :- தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் இன்று சில நகர்வுகள் ,டம்பெற்று வரும் நிலையில், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் மத்தியில் சில முரண்பாடுகள் இருந்து வருவதை அவதானிக்க முடிவதுடன், அண்மையில் வடமாகாண சபை விவகாரத்திலும் பல முரண்பாடுகளை அவதானிக்க முடிந்தது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- கூட்டமைப்பின் ஒற்றுமையை இன்று சர்வதேசம் கூட வலியுறுத்தி வருகின்றது. தமிழ் மக்களும் அந்த வலியுறுத்தலைத்தான் விடுத்து வருகிறார்கள்.
கூட்டமைப்புக்குள் சில போட்டி அரசியல் காரணமாகத்தான் இந்த ஒற்றுமையீனம் நிலவுவதாக நான் கருதுகிறேன். அதேபோல் சிங்களத் தலைவர்கள் அடுத்த தேர்தலை சந்திப்பது தொடர்பில் எண்ணுவதைப் போன்று எங்களுக்குள்ளும் சிலர் அடுத்த தேர்தலை சந்திப்பதை நோக்கமாகக் கொண்டு சில குழப்பங்களை விளைவிக்கப் பார்க்கிறார்கள்.
வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் சில செயற்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற ரீதியில், வடமாகாண சபை முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்குமிடையில் எந்தவிதமான கசப்புணர்வோ, போட்டியுணர்வோ இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் இருவரும் தாங்கள் ஒற்றுமையாக வேலைசெய்ய வேண்டும் என்பதில் அக்கறை காட்டுபவர்கள். அதனால் தான் அந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க கூடியதாக இருந்தது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையில் அவதானமாகச் செயற்பட்டு வருகிறார். அவர் அதனைத்தான் விரும்புகிறார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த கட்டங்களில் இருக்கும் சிலர்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
எது எப்படியிருந்தாலும் கூட்டமைப்பு ஒரு பொழுதும் உடையாது என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. வடமாகாண சபை விவகாரத்தில் சம்பந்தன் அவர்கள் மிகவும் நேர்மையாக செயற்பட்டார். கூட்டமைப்பு உடைந்துவிடாத விதத்திலும் மாகாண சபையில் பிளவு ஏற்படாத வகையிலும் அவர் நேர்மையாக செயற்பட்டார் என்பது என்னுடைய நிலைப்பாடு.
கேள்வி :- வட – கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், காணி சுவீகரிப்புகள் இந்த அரசாங்கத்திலும் தொடர்கின்றன. இதனை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பதில் : இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதை நாங்கள் அறிவோம். இதனை நிறுத்துவதற்கு மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதற்கு கூட்டமைப்பும் உறுதுணையாக நிற்கிறது. இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாங்கள் பலதடவைகள் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் பற்றி நீங்கள் கதைப்பதில் எந்தவித அர்த்தமும் இருக்கமுடியாது என்று நாங்கள் அரச தலைவர்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம்
ஆனால் இவற்றை நிறுத்துவதற்கு அரசங்கம் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கை பார்த்து அரசு பயப்படுவதால் தான் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுகிறது என்றே நான் கருதுகிறேன்.
அதற்காக தமிழ் மக்களுடைய சிறு சிறு விடயங்களில் கூட அரசாங்கம் அக்கறையீனமாக செயற்படுமாகவிருந்தால் அது நாட்டுக்கும் அரசுக்கும் சிறப்பானதாக அமையமாட்டாது.