நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் (வயது 39) என்பவரே யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ம் திகதி நல்லூர் ஆலய தெற்கு கோபுர வாசல் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் சென்றபோது, பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியை எடுத்து சுட்டபோது, பொலிஸ் கான்ஸ்டபிள் சரத் பிரேமசந்திர உயிரிழந்தார். மற்றொரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ தினத்தன்று தப்பியோடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் புலி உறுப்பினரான இவர் புனர்வாழ்வு பெறவில்லை என்றும் குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அத்துடன் 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாகவும், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் நண்பர்களான நண்பர்களான செல்வராசா மகிந்தன் மற்றும் பாலசிங்கம் மகேந்திரராசா ஆகிய இருவரையும் 48 மணித்தியாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள யாழ்.நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி….
நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.