மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐh குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த முன்னாள் நீதவானின் செயற்பாடுகளுக்கு பிறழ்வான விடயங்களை இவர் மேற்கொள்வதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை பிறிதொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில், நேற்று பிறப்பிக்கப்படவிருந்த கட்டளையை நீதவான் கிரேசியன் அலெக்ஸ்ராஐh ஒத்தி வைத்துள்ளார்.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை நீதவான் நேற்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போது, கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 84 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்புக் கருதி, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, பகுப்பாய்வு செய்யும் வரை அவை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யும் இடம், நிறுவனம் மற்றும் மனிதப் புதைகுழி தொடர்பில் இன்று கட்டளை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீதி சேவை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில், ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐh அறிவித்துள்ளார்.