யாழ்ப்பாணம் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தூர் – மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்றுகாலை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் இருந்து வாள்கள் உட்பட ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், நவக்கிரி பகுதி இளைஞர்களுடன் மோதியுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றபோது, முறைப்பாட்டை பொலிஸார் பதியவில்லை என தெரிவித்த காயமடைந்த இளைஞனின் உறவினர்கள், தாங்கள் வைத்தியசாலைக்குச் சென்று முறைப்பாட்டைப் பதிவுசெய்து கொள்வதாக, பொலிஸார் கூறியதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நடமாடும் கண்காணிப்பு பணியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த இரு பொலிஸாரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் பொற்பதிவீதிப் பகுதியில் 4 மோட்டார் சைக்கிளில் பயணித்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இன்றுஇந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கி கொண்டு செல்லாமல், பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே அடையாளம் தெரியாத இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.