dddfdfffffdfdஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, முதலாவது கடமை விஜயத்தை, நேற்று யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு மேற்கொண்டிருந்தார்.

இவருக்கான வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து அவரால் பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தினுள், மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியினால், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் குடாநாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை வழங்கும் நிகழ்வு, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இராணுவ தளபதியுடன் இணைந்து பரிசுகளை வழங்கினார். மேலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இராணுவத் தளபதி இன்றுபிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு முதலமைச்சரின் நல்லூர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமாக இடம்பெற்ற ஒன்றல்ல என குறிப்பிட்டார். இராணுவத்தளபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, தம்மை சந்திக்க வந்ததாகவும், இதன்போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் கருத்து பறிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கேப்பாப்பிலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதற்கு தாம் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி உறுதியளித்துள்ளார். அவ்வாறான தருணத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள உறுதியளித்ததாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.