தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட 2107 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளின் உதைபந்தாட்ட தேசிய மட்ட போட்டிகள் 27.07.2017 முதல் பதுளை மாவட்டத்தில் நடைபெற்றது. இவ் ஆண்டுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டிக்கு வவுனியாவில் இருந்து வவுனியா பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் தனது திறமையினை செவ்வனே வெளிப்படுத்திய 786 இளைஞர் கழகம் தேசிய மட்டத்தில் பல மாவட்ட அணிகளை வீழ்த்தி இவ் ஆண்டு மூன்றாம் இடத்தினை தனதாக்கியுள்ளது.
இவர்களுக்கான மாபெரும் வரவேற்பு நிகழ்வு கிராம மக்களின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.கே.மஸ்தான், முன்னாள் நகர சபை உறுப்பினர் பாரி, கிராம சேவகர் நசார், சமூக ஆர்வலர் ஆரிப், இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், முன்னாள் மாவட்ட சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் எ.ஜோன்சன் மற்றும் வைத்தியர் அனஸ் உட்பட பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் பங்களிப்புடன் தேசிய வெற்றி வீரர்கள் கௌரவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.