trtrrவீட்டுத்திட்டம் வழங்கக் கோரி, சாந்தசோலை கிராம மக்கள், வவுனியா மாவட்ட செயலகத்தை, இன்றுகாலை 11 மணிக்கு, முற்றுகையிட்டனர்.

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவித்து, வவுனியா மாவட்ட செயலாளரிடம், மகஜர் ஒன்றும் கையளித்தனர். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த கிராம மக்கள், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள், சாந்தசோலை கிராமத்தில் 168 குடும்பங்கள் மீள்குடியேறி வசித்துவரும் நிலையில், 36 குடும்பங்கள், தொடர்ந்தும் கொட்டில் வீடுகளில் வசித்து வருவதாக தெரிவித்தனர்.

“கடந்த 10 வருடங்களாக வீட்டுத்திட்டத்துக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்தும், வீடுகள் வழங்கப்படவில்லை. இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்று திரும்பிய மக்களும், யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களும் வசித்துவரும் நிலையில், நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

ஆனால், குறிப்பிட்ட சிலருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி, வவுனியா மாவட்ட செயலாளர், கிராமத்துக்கு வருகைதந்து, தங்கள் பிரச்சனைகளைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அம்மக்கள் மேலும் கூறினர்.