வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் 2 கிலோமீற்றர் சுற்றியே அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லவேண்டிய நிலைமை காணப்பட்டதுடன் மரணமானவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதிலும் தெற்கிலுப்பைக்குளம் மற்றும் கோவில்குளம் கிராம மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் தற்போது குறித்த வீதி பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதால் தமக்கு பல சிரமங்கள் குறைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.