pujithaநாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் சிவில் பாதுகாப்பு குழுவினருடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என தெரிவிக்கப்பட்டாலும் எங்கோ ஒரு மூலையில் அதன் விதையானது மீளவும் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறது. பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருந்த பலர் சமூகத்தோடு மீள இணைக்கப்பட்டாலும் அவர்களது செயற்பாடுகளில் மற்றும் மனநிலையில் வேறுபாடு ஏற்படவில்லை.  அவர்கள் முன்னைய மனப்பாங்குடனேயே செயற்படுகின்றனர். இது வளர்ந்து செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிப் பயங்கரவாதம் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை தற்போது மீண்டும் வடக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பணத்தை பெறும் சில குழுக்கள் நாட்டைப் பிளவுபடுத்தி சட்டம் ஒழுங்கு சரியில்லை பொலிஸாரின் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன மக்கள் இங்கு சமாதானமாக வாழமுடியாது என சர்வதேசத்தை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.