sssssssssssமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக ஆரம்பித்துள்ளனர்.

1968ம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் குடியிருந்து பின்னர் 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தற்போது நல்லாட்சி அரசின் மூலம் இராணுவ பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் தங்களுடைய காணிகளையும் பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர்கள் எட்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது நல்லாட்சி அரசே அதிகளாக்கப்பட்ட எமக்கு நாம் இழந்த காணியை வழங்கு, 8 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் காணி இராணு முகாமிக்கு எடுத்து மிகுதி 4 ஏக்கர் காணியை எமக்கு வழங்கு, இராணுவ கட்டளையிடும் அதிகாரியினால் விடுக்கப்பட்ட காணியை எமக்கு வழங்கு போன்ற வாசகங்களுடனான பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 2ம், 3ம் திகதிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அரசியல்வாதிகளின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டதாகவும், குறித்த அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் பஸ் மோதி பாரிய விபத்தில் 06 பேர் காயம்-

sdasவவுனியா, செட்டிகுளம் பகுதியில் ரயிலுடன் இலங்கைப் போக்குவரத்துச்சபை பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து, வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில், நேற்றுமாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து செட்டிகுளம் மெனிக்பாம் நோக்கிச் சென்ற இ.போ.சபை பயணிகள் பஸ் ஒன்று, மெனிக்பாம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில், மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பஸ் சாரதி உட்பட அதில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். சாரதி கவலைக்கிடமான நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இaதேவேளை, விபத்து இடம்பெற்ற ரயில் கடவை, பாதுகாப்பற்ற ரயில் கடவை எனத் தெரிவித்து குறித்து ரயிலை செல்ல விடாது அப்பகுதி மக்கள் அதனை மறித்து வைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார், அப்பகுதியில் பாதுகாப்பு கடவைக்கு இருவரை நியமிப்பதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து, மக்கள் ரயிலை செல்ல அனுமதித்திருந்தனர்.

கரவெட்டியில் மூன்று பிள்ளைகளின் தாயார் சடலாமாக மீட்பு-

deadமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெல்லுச்சேனையில் வசிக்கும் விஸ்ணுகாந்தன் இராசமலர் (வயது37) என்பவரே, நேற்றுமாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் பாப்பாமோட்டையில் ஆயுதங்கள் மீட்பு-

dfsdfsdமன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாப்பாமோட்டை பிரதேசத்திலுள்ள பதுங்கு குழியொன்றில் இருந்து, நேற்று ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பதுங்கு குழி, புலிகளால் பயன்படுத்தப்பட்டது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது, 81 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் நான்கும், 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களுக்கமைய குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.