கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் கிராத்தில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து, நேற்று பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியா – விழுபுரம் மாவட்ட ஈழ அகதிகள் முகாமில் இருந்து, கடந்த வருடம் நாடு திரும்பிய சின்னையா சுப்பிரமணியம் என்பர், தனது காணியில் உள்ள தோட்டக் கிணற்றைத் தூர் வாரிய போதே கிணற்றில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளார். இதன்போது, கிளைமோர் 02, கைக் குண்டு ஒன்று, மோட்டார் குண்டுகள் 20, தோட்டாக்கள், தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் 05 உள்ளிட்ட வெடிபொருட்கள் கிணற்றை சுத்தம் செய்தவர்களால் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, காணி உரிமையாளரால் அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இராணுவத்தினரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு, மேலதிக தேடுதல், செயலிழக்கச் செய்தல் நடவடிக்கைகள் கிளிநொச்சி விசேட அதிரடிபடையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.