கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வடமாகாணசபையின் 101வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வளங்கள் சூறையாடப்படுவது தொடர்பான பிரேரணை ஒன்றை மாகா ணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபைக்கு முன்மொழிந்திருந்தார்.
குறித்த பிரேரணை தொடர்பாக உரையாற்றும்போது அமைச்சர் அனந்தி சசிதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னார் வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை உருவா க்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக பொன்னார்வெளி கிராம மக்க ள் தமக்கு முறைப்பாடு கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனை மறுத்த எதிர்கட்சி உறுப் பினர் வி.தவநாதன் கடந்த ஆட்சியில் மேற்படி சீமெந்து தொழிற்சாலையை எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் அதனை ஆதரிக்கிறார்கள் எனவும் கடற்படைக்கும் அதற்கும் தொடர் பில்லை என சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவே அதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மேற்படி சீமெந்து தொழிற்சாலைக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் வழங்கவில்லை என கூறியதுடன் மேற்படி பொன்னார்வெளி கிராமத்தில் ஜப்பானிய தனியார் சீமெந்து நிறுவனம் சீமெந்து தயாரிப்பதற்கு அங்குள்ள கற்கள் பயன்படுமா? என ஆராய்ச்சி நடத்தியதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டதன் பின்னரே ஒப்புதல் வழங்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார்.