dsdபயணிகள் போக்குவரத்து பஸ்கள் தனியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான நடைமுறை நாளை முதல் கொழும்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனூடாக பொது போக்குவரத்து துறை மேலும் வலுப்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காலி வீதியில் மொரட்டுவ ராவத்தாவத்த சந்தியிலிருந்து கட்டுபத்த வரையான பகுதியிலும், வெள்ளவத்தை சவோய் திரையரங்கு சந்தியிலிருந்து பம்பலபிட்டி சந்தி வரையும் ஒரு வழித்தட போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து கொம்பனி வீதி வரையிலும், மருதானை பொரலை வரையான வீதி, நகர மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் இந்த நடைமுறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

பரிட்சார்த்த நடவடிக்கையின் சாதகத்தன்மையை பொறுத்து கொழும்பில் முழுமையாக இந்த திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.